August 22, 2009
Inglourious Basterds

இரண்டாம் உலகப் போர் குறித்து, பிரபலமான ஸ்பீல்பர்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் தொடங்கி, ஐரோப்பிய மேம்போக்கான அபத்தநகைச்சுவைப் படங்களான “எப்படி நான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினேன்” (Jak rozpętałem drugą wojnę światową), சமீபகாலங்களில் பார்த்த பிரமாதமான படங்களிலொன்றான ஜெர்மன் Downfall (Der Untergang) வரை கணக்கற்ற படங்கள். குறிப்பாக, சமீபத்தில் பார்த்த உலகப்போர்/பிந்தைய காலகட்டம் குறித்த ஜெர்மன் மொழிப் படங்களில் The lives of others குறித்து தமிழ் வலைப்பதிவுகளில் படித்திருக்கிறேன், Downfall குறித்து அதிகம் படித்த நினைவில்லை; நிச்சயம் பார்க்கப்படவேண்டிய சமீபத்திய படங்களில் ஒன்று என்று என் தீவிரமான பரிந்துரை இதற்கு. சற்றுப் பழையதெனில் Das Bootம்.
டாரண்டினோவின் இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படம் ஹிட்லரை, யூதப் படுகொலைகளை, இரண்டாம் உலகப் போரை ஒரு சட்டகக் கருவியாக (framing device) மட்டும் கொண்டு, திரைப்படங்களால் வரலாற்றை எரித்திருக்கிறது. இந்தப் படத்தின் முடிவில் ஹிட்லரை, கெப்பல்ஸை, கோயரிங்கை, அமெரிக்கத் தெற்கத்திக்காட்டான் ப்ராட் பிட் தலைமையிலான ஒரு யூத-அமெரிக்க, யூத-ஜெர்மானிய மானாவாரிப் படைக்குழு சுட்டுக் கொன்றுவிடுகிறது, அனைத்து நாஸி பெருந்தலைகளும் ஒரு திரையரங்குக்குள் வைத்து எரித்துக் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டாம் உலகப் போர் இந்தத் திரைப்படத்துக்கு ஒரு குறி அல்ல - “வில்லனைக் கொல்லு” என்னும் விறுவிறுப்பான திரைப்படங்களுக்கான முடிச்சு, படம் “வெளியான மொழி” குறித்த கவலையின்றி எப்படியொரு மொழிக்கலவையைக்கொண்டும் பாவனைகளைக்கொண்டும் வரலாற்றை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது.
படத்தின் தொடக்கத்தில் நாஸிகள் ஆக்கிரமித்துள்ள ஃபிரான்ஸில், யூதர்களை ஒளித்துவைத்துள்ள ஒரு ஃபிரெஞ்சு மாட்டுப்பண்ணை உரிமையாளர்/விவசாயியிடம் வரும் நாஸி ‘யூத வேட்டை’ அதிகாரியின் பேச்சு இப்படியாகப் போகிறது. சந்தேகங்கள் என்று சில சிந்தனைகளை முன்வைக்கிறார் -
எலிகளைப் பார்த்தால் ஏன் நமக்கு அருவருப்பு வருகிறது? இந்த வீட்டில் நீங்களும் நானும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு எலி வீட்டு வாசல் வழியாக வந்தால் அதை எப்படி வரவேற்பீர்கள்? அப்படியா, அப்போது எலிக்கும் அணிலுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? எலி மேல் உள்ள அசூயையும் வெறுப்பும் அணில் மேல் ஏன் இருப்பதில்லை? எலி பரப்பும் அதே நோய்களை அணிலும் பரப்பும். வாலைத் தவிர்த்துப் பார்த்தால் எலியும் அணிலும் ஒரே மாதிரித் தானே இருக்கிறது? - இந்த தர்க்கத்தின் பின்னுள்ள எலிகள் யூதர்கள் (எந்த ஒரு ஒடுக்கப்படும் இனக்குழுவுக்கும் பொருந்தக்கூடியதுதான்). நமது கீழைத்தேய அக(அ)ஹிம்சா அப்போஸ்தலர் ஜெயமோகன், அமெரிக்கா ஜப்பான் மேல் குண்டு போட்டதை மறக்கடிக்கத்தான் யூதப் படுகொலைகளை தனது ராட்சத ஊடகங்கள் வழி தொடர்ந்து முன்வைக்கிறது என்பது மாதிரி (யூதர்களின் படுகொலைகள் உலக மனசாட்சிக்கு விடப்பட்ட பெரிய வினா.. மானுடம் என்பது என்ன என்பதையே மறு வரையறை செய்தவை அவை. அதே சமயம் அவை சற்றே மிகைப்படுத்தப்பட்டுவிட்டனவா என்ற ஐயம் எனக்கு இந்நாளில் உள்ளூர உருவாகியிருக்கிறது. ஆயிரக்கணக்கான நாவல்கள் ,திரைப்படங்கள் மூலம் அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான நாகசாகி – ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா? சமீபமாகத்தான் டேவிட் இர்விங் போன்ற பேரழ்வு மறுப்பாளளர்களின் வாதங்களை வாசிக்கிறேன். ஆனால் யூதப்படுகொலைகள் நிகழ்ந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை. அதேசமயம் இப்பேரழிவுகள் இவர்கள் இன்று சொல்லும் அளவுக்கு பேரளவில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டனவா? அல்லது அமெரிக்கா நிகழ்த்திய மானுட அழிவை மறைப்பதற்காக — அமெரிக்கா உலகை காத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை உருவாக்குவதற்காக- இவை முன்வைக்கப்படுகின்றனவா?) செத்தான் அஹமதினேஜாத் ரேஞ்சில் செய்த அங்கஹதத்தைப் படித்து, இதுவரை எடுத்த தொள்ளாயிரத்து இருபத்தேழு விக்கலுடன் இன்னும் இரண்டு சேர்த்து இருபத்தொன்பது. சந்தேகம் இருந்தால், மேற்கொண்டு அமெரிக்காவில் இருக்கும் நாட்களில் வைஸந்தால் மையத்துக்கு ஒரு கடிதம் எழுதியோ தொலைபேசியோ, அசலில் அத்தனை யூதர்கள் செத்தார்களா என்ற சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம். அல்லது, நாங்கள் ஜூஸ் மாதிரி என்ற அசோகமித்திரனிடம் ஜெயமோகன் ஜூஸ்னா எந்த ஜூஸ் சார், ஆரஞ்சு ஜூஸா சாத்துக்குடி ஜூஸா என்று கேட்கலாம். இந்த நுண்ணுண்மைகளை நோக்கிய அசட்டுப்பிடிவாதம் தேறாத கேஸ் என்பதால் அதை இங்கேயே விட்டுவிடலாம்…
பாஸ்டெர்ட்ஸ் படத்தின் நாஸி ஆஃபீஸருக்கு படத்தில் இந்த மாதிரி ‘பொதுப்புத்தியைக் கேள்விக்குள்ளாக்கும் சந்தேக’ சிந்தனைகளுடன் அதிகாரமும் இருப்பதால் பெரிய பிரச்னைகளெல்லாம் இல்லை; தான் பேசிக்கொண்டிருக்கும் தரைக்கடியில் ‘எலிகள் போல’ ஒளிந்திருக்கும் யூதர்களை மெஷின்கன்னால் போட்டுத் தள்ளிவிடுகிறார். அபாரமான திரைக்கதை அமைப்புக்கு ஒரு துல்லியமான உதாரணம் இக் காட்சி - ஒரு நீளமான, அசௌகரியமான இறுக்கம் இறுதியில் வெடிப்பது; நிதானமான ஒரு பாத்திரம் (விவசாயி) படிப்படியாக சில நிமிடங்களில் நொறுக்கப்படுவது. கற்பனையான புராணீக உயிரினங்களைப்பற்றி போர்ஹேஸ் The book of imaginary beings என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்; கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் கழித்து ரொபர்ட்டொ பொலான்யோ Nazi Literature in the Americas என்று கற்பனையான நாஸி அனுதாப எழுத்தாளர்களைக்குறித்த ‘கலைக்களஞ்சிய வடிவிலான’ புத்தகமொன்றை எழுதியிருக்கிறார். வரலாறு என்பது பெரும் மோசடி - மோசடி என்பதை அறவியல் மீதான துரோகமாய்ப் அன்றி ஒரு அபத்த நிகழ்வாகப் பார்ப்பது குறித்துணர்த்தும் இது போன்ற புத்தகங்கள் மாதிரித்தான் ஒருவகையில் இந்தப் படமும். டாரண்டினோவுக்கு வரலாற்றுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கவில்லை - ஹிட்லர் ஒரு வில்லன், வில்லனுக்கு இன்னின்ன மாதிரி அடியாட்கள், நாஸி அடியாட்களைக் கொன்று அடியாட்களின் தலைத்தோலைச் சீவி எடுக்கவேண்டும், அல்லது பேஸ்பால் கட்டையால் ஃபென்வே பார்க் போட்டிகள் குறித்த தகவல்களை அள்ளி விட்டுக்கொண்டு நாஸி ஆஃபீஸரின் தலையை நொறுக்கவேண்டும், அல்லது இரட்டை ஏஜெண்டான ஜெர்மன் நடிகையின் காலில் தோட்டா பாய்ந்த ஓட்டைக்குள் விரலை விட்டுத் துடிக்க வைக்கவேண்டும். சுட்டுக் கொல்லப்படும் யூதக் குடும்பத்துப் பெண் ஒருத்தி தப்பித்து ஃபிரான்ஸில் ஒரு திரையரங்கு உரிமையாளராகி நாஸி பிரச்சார மந்திரி கெப்பல்ஸின் பிரச்சாரத் திரைப்படம் (தேசத்தின் பெருமை/Nation’s pride - கிட்டத்தட்ட முன்னூறு பேரை தனியொரு ஆளாகச் சுட்டுக்கொன்ற நாஸிப் படைவீரனின் அந்த குறிப்பிட்ட சாகஸத்தை விளக்கும் திரைப்படம்) திரையிடப்படும் தனது திரையரங்கின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அனைவரையும் எரித்துக் கொன்றுவிடுவது குறித்த மற்றொரு கிளைக்கதை.
ஆக, டாரண்டினோவின் இந்த நாஸி-எதிர்ப்பு
‘பிரச்சாரப்’ படத்துள் (பாஸ்டெர்ட்ஸ்) கெப்பல்ஸின் ஒரு ‘நாஸிப் பிரச்சாரப் படம்’ (தேசியப் பெருமை). அமெரிக்க டி.டபிள்யு.க்ரிஃபித்தின் Birth of a Nationஐ பெயரளவில், கருத்தளவில் நினைவுபடுத்தும் இந்த ‘நாஸிப் பிரச்சாரப் படத்தை’ இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படத்துக்காக அசலில் இயக்கியது இன்க்ளூரியஸ் பாஸ்டெர்ட்ஸில் கரடி யூதன் என்ற வேடத்தில் வரும் ஈலை ராத். கெப்பல்ஸின் படத்தை டாரண்டினோவின் படத்துக்கு உள்ளே திரையில் பார்க்கும் நாஸி அதிகாரிகள், அமெரிக்கர்களை ஃப்ரெடரிக் ஸோல என்ற அந்த நாஸிப் படைவீரன் குருவி சுடுவது போல சுட்டு வீழ்த்துவதை ரசித்து வெடித்துச் சிரிக்கிறார்கள், ஆரவாரிக்கிறார்கள். டாரண்டினோவின் படத்துக்கு வெளியே திரையரங்கில் படம் பார்க்கும் பார்வையாளர்கள், நாஸி அதிகாரிகளின் தலைத்தோலை கரகர என்று அறுத்து எடுக்கும்போது, பேஸ்பால் கட்டையால் சிதறுதேங்காய் போலத் தலையை நொறுக்கும்போது, நெற்றியில் கத்தியால் ஸ்வஸ்திகாவைக் கீறும்போது வெடித்துச் சிரிக்கிறார்கள், ஆரவாரிக்கிறார்கள். படத்துள்ளிருக்கும் படத்துக்கு நாஸி அதிகாரிகள் கைதட்டுகிறார்கள், படத்துக்கு வெளியே ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். தாராளவாதிகளின் ‘திரிபுக்குள்’ தீவிரவாதிகளின் ‘உண்மை’! படத்தில் ஆங்கிலம் கிட்டத்தட்ட கால்வாசி நேரம் மட்டுமே; மிச்ச நேரத்தில் ஃபிரெஞ்சு அல்லது ஜெர்மன் மொழி, திரையில் துணையெழுத்துக்கள் - அவ்வளவே. தனது பலவீனத்தை உணரும் பார்வையாளனின் பலவீனத்தை நோக்கி வலிந்து எடுக்கப்படுவதில்; சமகாலத் திரைப்பட இயக்குனர்களில் வெகுஜனப் போக்குகள், கலாச்சாரம், ரசனை போன்றவற்றைத் திருகி ஒரு வினோத அழகியலுடன் தருவதில், ரசனைச்சுரண்டலை வெளிப்படையாக அறிவித்துச் செய்வதில் என டாரண்டினோவின் படங்கள் கைதேர்ந்தவை - சமகால இயக்குனர்களின் படங்களில் பெரும் ஒப்புமைகள் ஏதும் இல்லாதவை. அவரது கச்சாப்பொருட்கள் கடந்தகாலம், அதன் திரைப்படங்கள். “நான் சொல்லநினைப்பது இது” என்பதல்ல, “நான் சொல்லநினைப்பது இப்படி” என்பது டாரண்டினோ படங்களின் கோணம், அதுவே அவற்றின் பெரும் வசீகரமும் கூட.
ஹிட்லர், கெப்பல்ஸ் இருவரும் இப் படத்தின் கோணத்துக்கேற்பச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்தீர்களானால் பின்பு Downfall திரைப்படத்தை தொந்தரவற்ற தனிமையில் பார்க்க முயலவும் - இப்படம் குறித்து எழுத நினைத்தது விட்டுப்போனது. முதலில் டௌன்ஃபால் பார்த்திருந்ததால் பாஸ்டெர்ட்ஸில் சில காட்சிகளை அதன் நோக்கத்தையும் தாண்டி நாடகீயமாக மட்டுமே பார்க்க முடிந்தது. திரையரங்க நுழைவுச்சீட்டு வாங்கியது ‘x டிக்கெட்டுகள் பாஸ்டர்ட்ஸுக்கு’ என்று.
6 Responses to “Inglourious Basterds”
Leave a Reply
August 22nd, 2009 at 11:47 pm
“திரையரங்க நுழைவுச்சீட்டு வாங்கியது ‘x டிக்கெட்டுகள் பாஸ்டர்ட்ஸுக்கு’ என்று. ‘’
எப்படி டிக்கெட்டுகள் எடுக்கவேண்டும் என்று சொன்னதற்கு நன்றி
August 23rd, 2009 at 5:11 pm
நன்றி. படத்தில் எலி/அணில் உதாரணங்களையும், அதே அதிகாரி ஷோஷானாவிடம் ஆப்பிரிக்க இனத்தவரைப் பற்றி பேசும்போதும் வெளிப்படவைத்த இனவெறியும், மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ம் செய்யும் பிரச்சாரங்களும் ஒரே அலைவரிசையில் இருந்தன.
ஜெமோ பற்றி: அது என்னவோ ஜெமோ பேச ஆரம்பித்தாலே நமக்கெல்லாம் கவலையாக இருக்கிறது. ஆனால் அவரின் கேள்விகள் (முக்கியமாக ஜப்பானின் அணுகுண்டு வீச்சு) David Ortiz முழு நீள பந்து வீச்சை Home run (நீங்கள் படத்தில் வரும் Eli Roth காட்சியைக் குறிப்பிட்டதால்
) அனுப்புவது போல அனுப்பிவிட்டு சுருக்கமாக இந்த ஆள் எல்லாம் கேட்க வந்து விட்டான் என்று முடித்து விடுகிறோம். பொது வெளியில் ஜெமொ-வும் அமி-யும் சுருக்கமாக ‘இந்துத்துவம்’ என்று அ.ஜீ விகளால் முத்திரைக் குத்தி ஒதுக்கப்படலாம். எதற்கும் இருபக்கங்கள் உண்டு என்பது நமக்கு ஏட்டு சுரைக்காயாகத்தான் இருக்கிறது. யாரும் கேட்கப் போவதில்லை.
இதனால் யூதர்களின் இன அழிப்பைக் குறைக்கவில்லை. ஆனால் ஒரு வரலாறு அறிபவனாக எனக்கும் அந்த கேள்விகள் இருக்கின்றன. இதுவரை படித்த வரையில் மே. நாடுகள் யூதர்களைக் காப்பாற்றாததை (அது உணமையும் கூட) ஒரு குற்ற உணர்வுடன் அணுகுவதைப் போல நாகசாகி,
ஹிரோஷிமா-வை அணுகவில்லை.
மீண்டும் நன்றி.
August 23rd, 2009 at 7:57 pm
ராஜ் சந்திரா - பின்னூட்டத்துக்கு நன்றி. ஜெயமோகன் சில விஷயங்களைப் பேசுவதைக் கேட்கும்போது கவலையாகத்தான் இருக்கிறது - காஷ்மீரில் நிஜமாகவே இத்தனை பண்டிட்டுகள் செத்தார்களா, இலங்கையில் நிஜமாகவே இத்தனை ஈழத்தமிழர் செத்தார்களா, ஜெயமோகன் போன்ற இன்னொரு எழுத்தாளரான ஓர்ஹான் பாமுக் சொல்வது போல துருக்கியர்கள் அசலில் அத்தனை ஆர்மீனியர்களைக் கொன்றார்களா என்று கேட்க எவருக்கும் உரிமை இருக்கிறது. அதற்காக பண்டிட்டுகளின் கொலைகள் குறித்துக் கேள்விகேட்பவர்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றும் ஓர்ஹான் பாமுக்கை துருக்கியர்கள் ஐந்தாம்படை எழுத்தாளன் என்றும் யாரும் சொல்வதே இல்லை அல்லவா. அசோகமித்திரன் சொன்னது குறித்து எனக்கு பரிதாபம் மட்டுமே இருக்கிறது. ஜெயமோகன் ஒரு இந்துத்துவர் என்று நான் சொன்னதில்லை - நாம் அனைவரையும் போல, அவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஏறிய வெவ்வேறு வண்டிகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்; அவ்வளவுதான். புனைவுகள், அவரது பல எழுத்துக்கள் மீதுள்ள மதிப்பு தாண்டி அவரது இலக்கியக் கோட்பாடுகள், சிந்தனைகள் போன்றவை தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதும் புதிதாக அளிக்காதவை, எனக்கு எந்தப் பயனும் அற்றவை - யூதக் கொலைகள் மீதான இந்த ‘சந்தேகங்கள்’ போல. அமெரிக்கா ஹிரோஷிமா நாகசாகி மீது குண்டு போட்டது மீதான சந்தேகங்கள் போல, ஈழத்தில் நடைபெற்ற சாவுகளில் நமது இந்தியாவின் பங்கு என்ன என்றும் அவருக்கு சந்தேகங்கள் இருக்கலாம், வாய்ப்பு கிடைக்கும்போது அதையும் எழுதுவார் என்று நம்புவோம்.
//மே. நாடுகள் யூதர்களைக் காப்பாற்றாததை (அது உணமையும் கூட) ஒரு குற்ற உணர்வுடன் அணுகுவதைப் போல நாகசாகி,
ஹிரோஷிமா-வை அணுகவில்லை.//
சில விஷயங்களை நான் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன் - யூத வெறுப்பில் ஐரோப்பா சற்றும் குறைந்ததில்லை, அன்றும் இன்றும். இரண்டாம் உலகப்போரின்போது யூதர்களுக்கு ஒரு நாடு இருந்து, அந்த நாடு படையெடுக்கப்பட்டு, நாட்டு மக்கள் கொன்றொழிக்கப்படவில்லை - அவர்கள் வாழ்ந்த நாடுகளின் குடிமைக்கட்டுமானத்திலிருந்து திட்டமிட்டு அகற்றப்பட்டு கொன்றொழிக்கப்பட்டார்கள். அன்றைய ஏகாதிபத்திய ஜப்பான், முறையான படைகளைக்கொண்டு ஏகாதிபத்திய நோக்கத்துடன் போரில் இறங்கிய ஒரு நாடு. ஒப்புநோக்க வாய்ப்பற்ற இந்த இரண்டையும் எப்படி அருகருகில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று விளங்கவில்லை. பேர்ல் ஹார்பரைத் தாக்கி அமெரிக்காவை இரண்டாம் உலகப்போருக்கு இழுத்து மூலம் ஜப்பான் தன் தலையில் தானே போட்டுக்கொண்ட குண்டு அது. வெள்ளைக்கார ஜெர்மனி மேல் போடாமல் ஆசிய ஜப்பான் மேல் அமெரிக்கா குண்டு போட்டது என்ற காலனீய காம்ப்ளெக்ஸ் வழி எழும் வறட்டு வாதத்தை நான் நம்பவில்லை.
//ஆனால் அவரின் கேள்விகள் (முக்கியமாக ஜப்பானின் அணுகுண்டு வீச்சு) David Ortiz முழு நீள பந்து வீச்சை Home run (நீங்கள் படத்தில் வரும் Eli Roth காட்சியைக் குறிப்பிட்டதால் ) அனுப்புவது போல அனுப்பிவிட்டு சுருக்கமாக இந்த ஆள் எல்லாம் கேட்க வந்து விட்டான் என்று முடித்து விடுகிறோம்.//
அப்படியா. இந்த ஆள் எல்லாம் கேட்க வந்துவிட்டான் என்று முத்திரை குத்தி முடித்து விடுவது!! நினைவுக் குதிரையைத் தட்டி விடுங்கள் - இதைத் தொடர்ந்து செய்து வந்துள்ள ஒரு நபரின் பெயர் உங்களுக்குப் புலப்படும்
August 23rd, 2009 at 9:24 pm
நன்றி.
>>ஒப்புநோக்க வாய்ப்பற்ற இந்த இரண்டையும் எப்படி அருகருகில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று விளங்கவில்லை
- என்னைப் பொறுத்தவரை பாதிக்கப் பட்டவர்கள் சாதாரண மக்கள். அது யூதர்கள், ஜப்பானியர்கள், ஈழத் தமிழர்கள், என்று அரசியல் அரங்கில் சில முட்டாள்கள் எடுத்த முடிவில் பாதிக்கப் பட்டவர்கள். இன்றும் பாஸ்டனில் யூத நினைவுச் சின்னம் பக்கம் நடக்கும்போது மனம் பாரம் ஆவது உண்மை. அது போல் அணுக் கதிர் வீச்சில் பாதிக்கப் பட்ட தலைமுறை இன்றும் ஜப்பானில் இருக்கின்றன. தன் நாடு ஏகாதிபத்தியத்திற்கு ஆசைப்பட்டதில் இவர்கள் கொடுத்த விலை. இந்தக் கோணத்தில்தான் இதை ஒன்றாகப் பார்க்கிறேன்.
>>செய்து வந்துள்ள ஒரு நபரின் பெயர் உங்களுக்குப் புலப்படும்
.
- ஐயா..நான் எப்போதாவது தேர்ந்தெடுத்த பதிவுகளைப் படித்து விட்டு ஓடிப் போய்விடுவேன். உங்களுடன் தான் முதன் முதலாக தொடர் விவாதம். எனக்கு அவர் யார் என்றே தெரியாது
August 24th, 2009 at 12:06 am
ராஜ் சந்திரா - மறுபடி எழுதியதற்கு நன்றி. சாமானிய மக்கள் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளால் மட்டுமல்ல, வாழ்க்கைச்சூழலில் எந்தவிதமான முட்டாள்களின் ஊடுருவலாலும் பாதிக்கப்படுபவர்களே. நிக்கோலஸ் ரோஸ் உயிரியலின் அரசியலைக்குறித்து எழுதும்போது மரபியல் கண்டுபிடிப்புகள், நுண்ணறிவியலின் பரவல் போன்றவை உருவாக்கும் அரசியல் மனித மதிப்பைத் தனிநிர்ணயங்களாக்கி, மனித ஆக்கசக்தி வேறுபாடுகளைத் தேவையானதொன்றாக்கி, சமுதாயப் பெருநிகழ்வுகளை தனிமனிதக் குழுக்களின் செயல்களாலான தொகைகளாக்கி, உயிரியல் ரீதியாக வித்தியாசமானவர்களையோ பிழையுள்ளவர்களையோ நெருக்கவோ விலக்கவோ செய்யும் என்கிறார். ரோஸின் அந்தக் கருத்தும் மேலும் பலவும் (அவரது Politics of life itself கட்டுரை இது - சந்தர்ப்பம் வாய்த்தால் படித்துப் பாருங்கள்) பல விதங்களில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது, அறிவியலை முழுக்கப் பார்க்க இயலாத சமூகவியல் நிபுணர் ஒருவரின் கோணம் என்ற முறையில். ஆனால், உயிரியல் என்ற துறையைத் தாண்டி இதே கருத்துக்களை எழுத்துக்கும் பொருத்த முடிகிறது - பாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளன் செய்வதும் இதையேதான், இதைத்தான் செய்தும் ஆகவேண்டும் - வேறு வழி இல்லை. ஜெயகாந்தன் போன்றவர்கள் உதிர்த்த ‘வெரைட்டி’ குறித்த கருத்துக்களை இப்படித்தான் பார்க்கமுடிகிறது. ஜெயமோகனின் ‘சிந்தனைகளும் கேள்விகளும்’ ஒரு புனைவெழுத்தாளராக அவர் உருவாக்கிய உலகத்தை உரைகல்லாகக் கொண்டு பெரும்பாலான வாசகர்களால் அணுகப்படுவது - நான் உட்பட. அவரது பாத்திரங்கள் ஆகாயத்திலிருந்து குதித்தவை அல்ல; ஒரு குறிப்பிட்ட சூழலில் உருவானவை, எந்தவொரு எழுத்தாளனின் பாத்திரத்தையும் போல. கருத்துக்கள் என்று இதைத் தொடர்வதை அவற்றுள் பொருத்தித்தான் பார்க்க முடிகிறது. அவர் தொடர்ந்து ஒரு பெருஞ்சித்திரம் (larger picture) குறித்துப் பேசுவதாகத் தோன்றினாலும் அவரே அதை நம்பினாலும் நிகழ்வது அதுவல்ல; சில கருத்துதிர்ப்புக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், சிலவற்றைக் குறிப்பிட்டு ஆகவேண்டும்.
யூதரான ஜான் ஸ்டூவர்ட் ஒரு முறை சொன்னது: ‘எண்ணிக்கை குறைச்சலென்பதால் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கமுடியாது - அதனால்தான் நாங்கள் ஊடகங்களில் இருக்கிறோம்’ என்று (யூத அதிகார நோக்கமேதுமின்றி) சொல்லி, வேறொரு தருணத்தில் ‘ஒன்றிரண்டு வருடங்களென்றால் பரவாயில்லை மூவாயிரம் வருடங்களாக வெறுக்கப்படுகிறார்களென்றால் ஏனென்று யோசித்துப் பார்க்கவேண்டும்’ என்கிறார். தாராளவாதியின் subversion இப்படி சுயபகடியோடு இருக்கும். அமெரிக்க வலதுசாரிகள் இது மாதிரி subversionஉடன் பேசுவதை யோசித்துப் பாருங்கள் (கருக்கலைப்பு, மதம், போர் எதுவானாலும்) - மேலும் அதிகம் எழுதத் தேவையில்லை; க்ளென் பெக்கின் செய்திநிகழ்ச்சிகளைப் பாருங்கள். ஜெயமோகனின் subversion க்ளென் பெக் ரகம் - அவ்வளவு தான். ஹிரோஷிமா மான் அமூர் படத்தைப் பார்த்து அணுகுண்டுகளின் வீச்சை அறிந்துகொண்டேன் என்று ஜெயமோகன் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன் - ஆலன் ரெனே, இரண்டாம் உலகப் போரின் இரு பெரும் அழிவுகளையும் படமாக எடுத்திருக்கிறார் - Night and fog யூதப் படுகொலைகள் பற்றியது, Hiroshima mon amour மற்றைய ஆவணப்படம் போலன்றி நேரடியாக அணுகுண்டு வீச்சைப்பற்றிச் சொல்லாமல், ஒரு ஜப்பானிய ஆணுக்கும் ஃப்ரெஞ்சுப் பெண்ணுக்கும் இடையிலான உறவு வழி அதை அலசுவது. இதில் Night and Fog நீங்கள் பார்த்திருக்கவில்லை எனில் அதையும் பார்க்க முயலலாம்.
//எனக்கு அவர் யார் என்றே தெரியாது//
ஒரு துப்பு. இவர் சில வருடங்களுக்கு முன்பு சொன்னது: வலையில் எழுதுபவர்கள் இலக்கியப் பயிற்சி அற்றவர்கள், நோ நுண்ணுணர்வு, இத்யாதி curveball. உங்களுக்கும் எனக்கும் இதெல்லாம் இருக்கிறதா தெரியவில்லை. இப்போது வலைத்தளத்தைப் படிப்பவர்கள் சிலாகித்து வாசகர்கள் எழுதும் கடிதம் வலையிலேயே வருகிறது. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?
August 28th, 2009 at 2:34 am
உங்கள் மொழி நடை அற்புதம்..தமிழ் மொழி இன்னும் இலக்கண ஒழுங்கில் அமிழ்ந்து சலிப்பூட்டுகிறது.உங்களை போன்றவர்கள் இம்மாதிரி புது நடையில் எழுதினால்தான் புதிய புனைவுகள் இனிமேல் சாத்தியம்..