May 6, 2008
சாலைகள், சதியாலோசனைகள்
சாலைகள், சதியாலோசனைகள்
-சன்னாசி
இந்த சாலை ஒரு ஓவியரை, ஒரு எழுத்தாளரை, ஒரு இசைமேதையை, ஒரு அசலான கொலைகாரனை உருவாக்கியிருக்கிறதா என்றான் கசப்புடன். என்றாள் கசப்புடன். நேராகப் பார் - இதன் பரப்பில் ஒரு ஓவியத்தை உன்னால் கற்பனைசெய்யமுடிகிறதா? நிச்சயம் முடியும். இந்த வெற்றுத் தார்ப் பரப்பில் ஒரு மாசராட்டியையும் வெளியே தொங்கும் இருபத்துமூன்று பவுண்டு முன்னங்கையையும் ஆஸ்ஃபால்ட்டில் உரசும் மோதிரவிரலின் பெருத்த கல்லையும் உன்னால் கற்பனைசெய்யமுடியும். மோதிரவிரற் கல்லை ஒரு மண்டையோடாகக் கற்பனைசெய்யமுடிவது இச் சாலையின் துல்லிய நேரின் ஒரு வெற்றுப் பிம்பம், ஒரு சலனமுறும் பிரதிபலிப்பு என்றாள். இந்த சாலை, பிரிட்டிஷ்காரர்களைப் போன்றது - மூக்குப்பெருத்தோழ்முகவுள்விருத்திப் பிரிட்டிஷ்காரத் தீவுக் காட்டுமிராண்டிகள் போல நியூட்டனையும் டார்வினையும் தவிர்த்து த்வோரக்கோ கார்லோ ஸ்கார்ப்பாவோ, அடிப்படையோர் இருதயராசாக் கொஹனோவ்ஸ்கியோ நகுலனோ கூட உருவாகியிருக்க முடியுமா இந்தச் சாலையில் என்றாள் மேலும் கசப்புடன். இந்தச் சாலை ஒரு பெரும் நாக்காயிருப்பின் அவிழ்ந்து விழும் தொண்டைக்குழியிலிருந்து இந்த முகப்புவிளக்கு வரைக்கும் ஹெமிங்வேயை அகட்டி விரித்து வைத்து தொடர்ந்து அவன் மேல் காரைச் செலுத்திக்கொண்டேயிருப்பேன் என்றாள். கடலும் கிழவனும் ஒரு பெரும் நசுக்கு யந்திரமாயிருப்பின் அதனுள் அவன் தலையை நசுக்கி வைப்பேன் என்றாள்.
இதுதான் என் பெரிய பிரச்னை. எனதுருவாக்கத்துக்கு என்னால் திரும்பச் செல்லமுடிவதில்லை. ஜல்லியை சிமெண்டைக் கலக்கும் பெரிய யந்திரங்களுக்கு இந்த சாலைகளென்பது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை - நீண்டு நெடிந்து பலிகொள்ளும் உயிர்களுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யும் இந்த நீளமனைத்தும் ஒரு சிறு கோளத்துக்குள் உருவாவதாகக் கற்பனைசெய்துகொள்ளும் இவற்றைச்சுற்றிச் சாக்கணிந்த கால்கள், சாக்கைக் கழற்றிவைத்துச் சோறுண்பவை, சோறு சிதறும் ஜல்லிகளைக் குறிதவறிக் கொத்தித் தங்கள் அலகுகளை மழுப்பிக்கொள்ளும் முட்டாள் காக்கைகள். கேசவய்யாவின் மீன் வறுவல் காய்ந்துபோயிருந்தது. இதைப் பார்க்கும் என்னை என்ன செய்யவேண்டுமென்று கூறமுடியும்? அவனது குடல் சுருங்குவதை என்னால் உணரமுடியாதென்கையில் வெயில் தகிக்கிறது, தாரை ஊற்றினால் நல்லது, ஒருவகையில் தகித்தாலுமதோர் சட்டை. இவர்கள் கருக்கும் வெயிலடித்தாலும் சட்டையைக் கழற்றுவதில்லையாயினும் என்னைத் தலையிலிருந்து கால்வரை அமைவதாய் நிர்ணயித்து எனக்கொரு திசையை அர்ப்பணிக்கிறார்கள் - நான் முன்னிருந்து பின்னாக நீளுகிறேன் அல்லது ஒரு புள்ளியெனப்படுவதிலிருந்து இன்னொரு புள்ளியெனப்படுவதற்கு நீள்கிறேன் என்பது ரீதியிலான வெகு திசைதகர்த்த விஷயங்களை என்மேல் பேசி என்னைக் குழப்பத்துக்குள்ளாக்குகிறார்கள்.
அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் - எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது - உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு - எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே. எங்கள்மேல் வண்ணத்துப்பூச்சிகள் அமர்வதில்லை, வண்ணத்துப்பூச்சிகளின் சிறகுகளை வெகு எளிதில் எங்களால் கருக்க முடியும், எனது கரத்திலிருந்து எனது இணைகளைப் பிரித்து இருபத்துமூன்று கிலோமீட்டருக்கப்பால் கல் குவாரிகளுக்கும் சிறு மலைகளுக்கும் அப்பால் பார்த்தீனியச் செடிகள்மண்டிய பிரதேசங்களுக்கு குறுக்கே ஓடும் கோழிகளுக்கு மத்தியில் அமைத்ததற்குப் பழிவாங்குவது என்பதில்லை இந்தக் குணாம்சம் - இச் சிறுமைகள் எமக்குரியதல்ல; எமது சிறுமைகள் எமது சிறுமைகளுமல்ல. எமது பாலை யார் நிர்ணயிப்பது, எவை செலுத்துவது எமது கரக்கோணல்களின் நியதிகளை.
மேலே சொன்னது எங்கள்மேல் கடந்துபோகும் ஒரு கணத்தினொரு துகளின் பகுமானம். பகுமானத்துக்குத் தேவையான கூர்மையைச் செதுக்கிவைத்திருக்கும் பூத்தொட்டிச் செடிகள் நாங்கள் முடிவதாக நாங்கள் கருதக்கூடிய ஏதோவொரு தோட்டத்தின் நடுவிலிருக்கின்றன, நாங்கள் முடிவதாக நாங்கள் கருதக்கூடியதென்பது பெரும் கண்கட்டு வித்தையென்பதை நாங்கள் சொல்லித் தெரியக்கூடிய நிலையில் எங்களுக்கு புதைந்திருக்கும் ஜல்லிகளில்லை.
இப்போது விஷயத்துக்கு வரலாம். மேற்குறிப்பிடப்பட்ட சிறு வரைவுகளின்மூலம் என்னைக்குறிப்பது அசலில் எனது இணையைக்குறிப்பதாகுமென்று புரிந்துகொள்ளும் உதற்கேற்ப மேற்கொண்டு தொடர்வதிவ்வாறு:
ஒரு கதை கேட்டோம். கத்திரிக்காயின் சாகஸங்கள். எங்களில் ஒருவன் உருவாக்கிய கதை இது; பின் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போனது. டாமிடமிருந்து தப்பிக்க ஜெர்ரி வாஷ்பேஸின் கடலுக்குள் படார் படார் என்று தட்டுப்படகில் அமர்ந்து ஸ்பூன் துடுப்புப் போடும் கதையைத் திருடி அதைக் கத்திரிக்காய் ஓட்டிக்கொண்டு போவதாகக் கதையளந்தான் அவன். இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாது. மஞ்சள் வயல்களால் நிறைந்த கிராமத்தினொரு திருக்கம். எங்கே பார்த்தாலும் நெற்காடுகள், அவற்றுக்குள் நாங்கள் தொலைந்துபோய் இருண்ட பண்ணைவீடுகளுக்குள் நுழைந்தபொதெல்லாம் அங்கேயொரு கிழவியிருந்து எங்களுக்கு மர்மலேடும் ஆரஞ்சேடும் லெமனேடும் அளித்தாள். அப்படியிருந்துங்கூட எங்களுக்கு கத்திரிக்காயில் சுவாரஸ்யம் போகவில்லை. எங்கள் வாழ்க்கையில் பாதி நேரத்துக்குமேல் பெருமூச்சுவிட்டே கழிந்தது. ஒருவேளை அதனால்கூட எங்கள் மார்புகள் இப்படி அகன்று விரிந்து கனமாக ஆணழகன் போன்றிருக்கலாம். கதை கேட்பதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அந்தக் கதையைத் தோற்றுவிக்க நாங்கள் நினைத்ததில்லையென்பதால் அதுவும் வளர்ந்து நீள்வதை நிறுத்தவில்லை. கதைகேட்பதற்காக இரவில் ஒரு அறையில் நாங்கள் ஏழுபேர் நெருக்கியடித்துக்கொண்டு படுத்துக்கிடப்போம். ப்ளக்கினுள் விரலை நுழைத்துத் துழாவ சன்னாசிக்கு ஒரு தனி இடம், அவனுடைய செங்கல்களுக்கு வேறு இடம், இது போதாதென்று வளர்ந்துகொண்டே போன கதைகளும்வேறு இடத்தை அடைத்துக்கொண்டன. உதாரணத்துக்கு, கத்திரிக்காய் ஒரு ஹோட்டலுக்குப் போய் தகராறு செய்கிறான். அப்போது அங்கே ஒரு நூற்றைம்பது பேர் இருந்தார்களென்றால் போச்சு. சங்கர்லாலுக்கும் எங்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும். துரதிர்ஷ்டவசமான ஒரு நாளில் இப்படி நுழைந்த நெரிசலான தெருவொன்றின் விளைவாக சன்னாசி நசுக்கப்பட்டு அவனது சில்லுமூக்கு உடைந்துபோய்க் கொடகொடவென்று நெத்தங் கொட்ட, இவரோடு இரவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் பொய் வந்தோம். பாவாடையணிந்த ஆண்கள் உலவும் தெருக்களில் இந்தச் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. பாவாடையணிந்த ஆண்கள் உலவும் தெருக்கள் மிக விசாலமாக இருந்தன, எங்கே பார்த்தாலும் மாடாக்குழி எண்ணெயின் மயக்கும் கசட்டு வாஸனை வீஸிக்கொண்டிருந்தது. கத்திரிக்காய் அங்கே என்ன ஸெய்தானென்பது முக்கியமில்லை, நாங்கள் அங்கே இருப்போம்; எதுவும் செய்யவும் மாட்டோம். கத்திரிக்காய் ஸாகஸங்களுக்காகப் பெண்களையும் ஆண்களையும் உருவாக்க மிகுந்த ஸிரமப்பட்டோம். அவனுக்காக நாங்கள் மிகுந்த மெனக்கெட வேண்டியிருந்தது. ஹோட்டல் ஸாகஸங்கள், குகைக்குள்ளிருந்து உருவமுடியாத மந்திரக்கோலை விஸேஷ, மதியூஹங்கள் மூலமாஹ உருவியெடுத்த ஸாஹஸம், ஏழு கடல் ஏழு மலை தாண்ட நேரமில்லையென்று மூன்று கடல் மூன்று மலையைப் பிளந்து ஏழு ஏழாக்கி அதன் கீழுள்ள பாதாளத்தில் ஒளிந்திருந்த இளவரஸியை மீட்டு வந்தது, ஒன்பதரை விரல்கள்மட்டுமே கொண்டிருந்த இளவரஸியின் மீதிப் பத்தரை விரல்கலையும் மீதி மலைகளைக் கடக்காமலே ஒரு பூனையின் குடலுக்குள்ளிருந்து கண்டுபிடித்துக் கவர்ந்துவந்தது, துணிகள் விற்கும் ஸந்தையின் குழப்பமான பிரம்மாண்டத்துட்போய்ச் சற்றுநேரம் துணிக்கடைப் பொம்மையாய்நின்று, பொம்மை கையில் படிக்க வைத்திருந்த புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பிப் பிடித்துப் பொம்மையைத் தவிக்கவிட்டது, எண்ணற்ற பெண்களை அரக்கர்கள் பிடியிலிருந்து விடுவித்துப் போட்டது, எண்ணற்ற ஆண்களை பெண்களின் பிடியிலிருந்து விடுவித்துப் போட்டது, ஒற்றைக்கொம்புடைய குதிரையொன்று முட்டிவிட்டதால் கருப்பையினொரு கிளையைக் காணாமலடித்துவிட்டிருந்த தேவகன்னியொன்றுக்கு மறைந்திருந்த கிளையை உருவிக்காட்டிக் கருப்பையிற் சேர்த்தது, இதுபோலக் கணக்கின்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் அற்புதமான ஸாகஸங்களை. அப்போது அவை அற்புதமாயிருக்கவில்லை யென்பதைவைத்து எங்களுக்கு இப்போது இளமை திரும்புகிறது என்பதை எப்படிச் சரியாக யூகித்தீர்களென்றுதான் தெரியவில்லை. அது மெத்த ஸரி. பிரமாதமான கதைகளையெல்லாம் கூறாமல் விட்டுவிடுகிறோம். திருஷ்டி. இத்தனை கதைகளின்பின்பும் - அவை கதைகளா என்பதுகுறித்துமொரு ஸந்தேகம் - ஒரு பெரும் ஸந்தேகம் எழுந்துகொண்டேயிருக்கிறது.
யுவர்களும் யுவதிகளும் அனைத்திலும் வந்துகொண்டேயிருந்தார்ஹள். நிஹரற்ற அழஹுடன். நாங்கள் எவ்வளவு ஸிரமப்பட்டிருப்போம். அவர்ஹளை மிஹத் துல்லியமாக எங்களால் வர்ணிக்கமுடிந்தது எவ்வளவு மீளமுடியாச் சிக்கல்களில் எங்களை ஆழ்த்தியதென்று இப்போதும் நாங்கள் ஸிந்தித்துப் பார்க்கையில் - ஒருவஹையில் ஒருவிதத்தில் ஒரு கோணத்தில் அளவுகடந்த மகிழ்ச்சியும் வளிநிறையுடலின் மிருதுவும் ததும்பிவழிந்து நாங்கள் அடக்கமுடியாமல் தரையில் மல்லாந்துகிடந்து கைஹால்களைப் பாதாளத்துள் தொங்கவிட்டபடி ஆஸுவாஸித்துக்கொண்டாலுங்கூட - அவை ஒருவிதத்தில் ஒருவஹையில் ஒருகோணத்தில் எங்களை மிஹவும் ஸோரச்செய்தது. விவரணைகளையும் வர்ணனைகளையும் மறுபடி இங்கே கொண்டுவரும் தவறைத் திரும்ப நாங்கள் ஸெய்யவே மாட்டோம்.
அனைத்து யுவர்களின், யுவதிகளின் எண்ணிக்கை அதிகமானபோதுதான் சாலைகளுக்குள் சிக்கல் முளைத்தது. அவர்களைக் குறிக்க நாங்கள் சில வாக்கியங்களைப் பிரயோகித்திருந்தோம். நான்கு திசைகளிலும் அவை மாறிமாறி மோதிச் சிதைந்து தோன்றிய திசைகளிலும் காணமுடியாத, முழுமதிபோன்ற, பிரதிபலிக்கும் ஸ்படிகங்களில் பெருகும் சந்திரன்கள்போன்ற அழகின் பெருக்கத்தை அவர்கள் பெற்றிருந்ததாகவும், இதுபோன்றும் பலமுறை நாங்கள் கூறியிருந்தோம். தனித்தனிக் கதைகளாகவேறு பலதும் அமைந்துபோனதால், கடைசியில் பார்க்குமோது அனைவருமே ஒரே யுவதி அல்லது யுவனின் பிம்பங்களா அல்லது யுவதியும் யுவனும் ஒன்றேவா என்று மயக்கமேற்பட்டது. கூற்றுக்கள் தங்களுக்குள் பின்னிக்கொண்டு அர்த்தமற்றல்லதுபோலச் சென்றன. சென்றன என்பதைவிடச் சுழன்றன. அழகும் யௌவனமும் பிரிவற்ற வனப்பும் இடைவிடாது நிலைத்திருக்கத் தொடங்கின; அல்லது எங்கள் பார்வைப்புலத்தின் சக்தியை வென்று மீறி நிகழுமளவு வேகத்தில் அவை வருகைதந்தன. எங்கள் கண்முன் இருவங்கள் அசையக்கண்டோம். அழகென்ற அருவருக்கத்தக்க வார்த்தை எங்களைப் பிசாசாய்ப் பீடித்து இடர்தந்தலைந்துகொண்டிருக்க, நிலையிழந்த எங்கள் சமன்பாடுகளின் சிதைவுகள் எங்கள் கட்டில்களுக்கடியில் இறந்துதிர்ந்த தோலணுக்களுஅன் இணைந்து குப்பையுருவாக்கின. ஒரு கதையின் யுவதியொருத்தி உலகத்திலேயே - அல்லது பிரபஞ்சத்திலேயேகூட - ஜீவராசிகளனைத்தையும்விட, ஜடவஸ்துக்களனைத்தையும்விட அழகாயிருந்தாளென்று ஓரிடத்தில் குறித்தோம். அக்கதை முடிவடைந்ததாகக் கூறப்பட்டபின் தொடங்கிய வேறொரு கதையில் வந்த யுவதியும்கூட - யுவதியொருத்தி உலகத்திலேயே, அல்லது பிரபஞ்சத்திலெயேகூட ஜீவராசிகளனைத்தையும்விட, ஜடவஸ்துக்களனைத்தையும்விட அழகாயிருந்தாளென்று அழகாயிருந்தாளென்றும் அழகாயிருந்தாளென்றும்கூட ஓரிடத்தில் குறித்தோம். துரதிர்ஷ்டவசமான நாளொன்றில் எங்களிலொன்று தேனீரருந்தியபின்னானவொரு மஞ்சள் மாலையில் எந்த யுவதி அனைவரிலும் அழகானவளோ அவளைத் தன்னுடைய அன்றைய இரவின் அசற்கனவில் விடுவிக்க விரும்புவதாஅவும் அதற்கு எங்கள் அனைவரின் உதவியும் தேவைப்படுகிறதென்றும் கண்ணீருடன் வேண்டிக்கொண்டபோது நாங்கள் பரிந்து யுவதிகளை ஒழுங்குபடுத்தத்தொடங்கியபோதுதான் அவர்களால் மறைபொருளாகவுமிருக்கமுடியுமென்பதைக் கண்டுபிடித்தோம். ஒரு திறந்த வெளியில், புல் பூண்டு ஏதுமற்ற - மணல் - குளிர்ந்த மஞ்சள் அலைகள் மட்டுமே பரவியிருந்த பிரதேசத்தில் கவண் உதவியுடன் யுவதிகளைத் துரத்திக் காயடித்து நாங்கள் குழுமச்செய்தபோது எண்ணிக்கைபெருக்கம் பைசாசத்தனமாகத் திரிவதைக் கண்டோம். ஒவ்வொரு யுவதியையும் ஒரு வாக்கியம் தொடர்ந்து வந்தது; அல்லது பல வாக்கியங்கள்: பல வாக்கியங்களாக இருக்கையில் அவை ஒரே வாக்கியம்போன்றவைகளாகத் தோன்றின. அதன்விளைவு அனைத்து யுவதிகளுங்கூட ஒரேபோன்ற வாக்கியங்களுடன் தோன்றினர்; அதன்விளைவு அனைத்து யுவதிகளும் ஒன்றேபோலிருந்தனர் - அதாவது, துல்லியமாகக் கூறியாகவேண்டும் இந்த இடத்தில் - ஒன்றேபோலாகத்தொடங்கிய அனைத்து யுவதிகளும் ஒன்றேயாக நெருங்கி ஒன்றேயாக நெருங்கிப் பின் பிரிந்து கூடி இணைந்து ஒன்றேயாக முயன்றுகொண்டிருக்க அந்த மூச்சுத்திணறவைக்கும் நேரத்தில்தான் எங்கள் கவண்களை நாங்கள் ஒடித்தெறிந்தோம் - எங்கள் கண்முன்னதாகவே எண்ணிக்கை மிக வினோதமாக மாறுபட்டுத் திரிந்தது. கூடியபின்குறைந்துபின்கூடியது. முந்தைய வாக்கியத்தை வெவ்வேறு விதங்களில் அணுகலாமென்பதுதான் எங்கள் பலம். அங்கே நடந்ததை அப்படியே சாலைகளில் பெயர்த்தெடுத்துவைக்க எங்களுக்குத் துளியும் விருப்பமில்லையென்பதுதான் எங்களது மிகப்பெரிய பலம். பெரும் குடைச்சல். புதிதாகக் கவண்களை உருவி யுவந்திகளை மறுபடிக் குறிப்புகளுக்குள் துரத்தினோம், பின் விவாதம் தொடங்கியது.
எங்கள் வளாகத்தில் வளர்ந்துகொண்டிருந்த ஒரு பன்றிக்கு இரும்புச்சத்து தேவைப்பட்டது; அதற்கான மருந்து உடனடியாகக் கிடைக்காததால் மோடி மஸ்தானின் இரும்பு உலக்கையைப் பொடிசெய்து திறந்த ஒரு மரத்தொட்டியில் போட்டு வைத்திருந்தனர். பன்றிகளின் உணவில் தினம் சிறிது இரும்புத்துகள்கள் கலக்கப்பட்டன. பௌர்ணமி இரவில் வெள்ளை வட்டத்தை மிகுந்த பிரயாசையுடன் கடந்து வந்த பசித்த எலியொன்று மரத்தொட்டியினடியில் துளைபோடுமென எவர்கண்டது - சிறிது துகள்கள் தரையில் சிந்தின. சற்றுத்தூரம் பறந்து தரையில் நிலைத்தன. அஸ்வத்தாம; அங்கேறிய காளையொன்றின் இந்திரியந்தரையிற்சொட்டிநிகழ்ந்ததோரனலாசுரநனவு, தர்ப்பையருகு.
நாங்கள் விவாதிக்கத்தொடங்கியநாள் மாலைக்குள் எட்டு உலக்கைகள் தரையில் முளைத்திருந்தன. தொடர்ந்துகொண்டேயிருந்த விவாதத்தில் நாங்கள் தொட்டிக்குச் சற்றுத் தள்ளிய இடம்வரை எப்படி வந்தோமென்று தெரியவில்லை. தரையில் முளைத்திருந்த உலக்கைகளின் தெரிந்த நுனியில் தடித்த இரும்புப் பூணிருந்தது. மிகப் பெரிதாகப் பூணிருந்துவிட்டபடியால் மிகவும் கோளவடிவமாகவும் - அது ஒரு கதை போலவும் தோன்றியது. கோளவடிவங்கள் எங்களுக்கு எப்போதுமே நெருக்கடியை உண்டாக்கியதில்லை. அவை எல்லைகளும் முடிவுமற்றவை என்ற சிந்தனைக்கு முடிவில்லையென்று எங்களுக்குச் சொன்னதும் சன்னாசிதான். பின்பு விவாதம் முற்றி நாங்கள் கதைகளைப் பிடுங்கித் தாக்கிக்கொண்டபோது எங்கள் பற்கள் சரமாரியாகச் சிதறின, தலையில் அடித்துக்கொண்டு அழுதவாறு சன்னாசி தானும் ஒரு கதையை உருவியெடுத்து எங்கள் கதையை அடித்துச் சிதைத்து சண்டையை நிறுத்தத் தன்னாலியன்றளவு முயன்றான். என்னதானிருந்தாலும் அன்றைக்கு சன்னாசி மட்டும் இல்லையென்றால் இன்று சன்னாசி மட்டுந்தான் இருந்திருப்பான்.
பின்பொருசமயம் நாங்கள் அறியாதவொரு தருணம் கத்திரிக்காயைத் தொலைத்தோம். இப்போதும் அவனைப்பற்றி விவாதித்துக்கொண்டுதானிருக்கிறோம். இருக்குமிடம் தெரிந்துவிட்டால் போதும், கண்டுவரத் தேவையில்லை. சன்னாசியின் அலமாரிக்குள் அடுக்கிவைக்கப்படாமல் குழப்பமாக ஒன்றையொன்று குறுக்காக வெட்டிக்கிடக்கும் மரச்சிதைவுகளுக்கிடையில் இன்னும் குறுக்காகச் சாய்த்துவைக்கப்பட்டிருக்கிறது கதை.
அதன்பிறகு நாங்கள் கத்திரிக்காயின் ஸாஹஸங்களைக் கைவிட நேர்ந்ததற்கான காரணம் மிகவும் அபாக்கியமான சந்தர்ப்பமொன்றில் நேர்ந்தது.
அருங்காட்சியகத்திற்கு எங்களிலொரு கிளை சென்றது. எங்களிலொன்று ஏதென்று குறிப்பிடாமல் குறிப்பிடுவதால் அதற்கும், அது துரத்திய அதற்குமிடையில் எழக்கூடிய நிச்சயமின்மைகளின் சாத்தியத்தைத் தவிர்க்க, துரத்திய எங்களிலொன்றை சன்னாசி என்று வைத்துக்கொள்வோம். ஏனென்றால் மற்ற ஆறு கிளைகளுமே ரஷீதுக்குப் பழக்கமானவர்கள் ரஷீத். அவனை சன்னாசி என்று கொள்ளலாம், ஆனால் அவன் உண்மையில் சன்னாசி இல்லை. அவன், சன்னாசி, எங்களுடன்தான் இருந்தான்.
சறுக்கிச் சாய்த்துவிடக்கூடிய பளிங்குத் தரையில் கால்கள் தொய்யத் தொய்ய பயத்திலும் பீதியிலும் நெருங்கிவரும் சாலைகள் தோற்றுவித்த நடுக்கத்திலும் மஞ்சள்நிறமுகமும் அழகாகக் கத்திரித்து விடப்பட்ட மீசையும் கோணித்து அதிர அடர்ந்து வௌவால்போல இணைந்த புருவங்களுடனும் உயர்ந்த ஷூக்களுடனும் கோணமற்றுச் சரிந்த குண்டிகளுடனும் அவன் ஓட, சன்னாசியின் நிழலும் சன்னாசியும் கையில் ஒரு இரும்புக் கழியுடன் அவளைத் துரத்தினர். சன்னாசி கண்களில் வெறி தாண்டவமாடியது.
அதற்கு முன்பாக ஒரு பெரிய மலையுச்சியில் ஒரேயொரு மொட்டைப் பாறையின் அபாயகரமான மத்தியில் சன்னாசி புகைத்துக்கொண்டு அமர்ந்திருந்தபோது காற்றில் அலையும் வெள்ளைத் தாடியுடன் அதிகம் வேண்டாமென்றாரொரு அதிகிழவர். வெறுப்புடன் அவரைப் பார்த்தான் சன்னாசி. இரு பாதங்களும் தரையில் அழுத்தமாக ஊன்றியிருக்க, குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார் கிழவர். அதன் முதுகின்பின் விரிந்தது முடிவற்ற பாதாளம். புகைமயக்கம் மேலேற சன்னாசி பாறைக்குச் சற்றுக் கீழே அருகிலிருந்த அக் கல் அறையைக் கண்டான். பாதி திறந்திருந்த கற்கதவு அதற்கு மூன்று சுவர்களே என்றுணர்த்த, அதன்பின்பும் அகண்டிருந்தது பெரும்பாதாளம்.
—————————————————————————————–
ஓவியம்: The army of mushrooms (Takashi Murakami)
Leave a Reply
