கரிசல்

Blog best viewed in Firefox/Chrome

April 8, 2006

ஒரு நகரத்தைக் கடித்தபோது

ஒரு நகரத்தைக் கடித்தபோது
-சன்னாசி

ஒரு நகரத்தைக் கடித்துத் தின்றபின்
பல்லிடுக்குகளில் சிக்கித் திகைத்திருப்பவை
நார் நாராய்க் கிழிந்த தசைத்துணுக்குகள்
உடைந்து சிதறிய பேருந்துகளின் தகரச் சேதங்கள்
நிலவின் உடைசல்கள்
பள்ளிகள் நூலகங்கள் பாதாளச் சாக்கடைகள்
நீளமாய் அறுந்து தொங்கும் ஒளிப்பதிவு நாடாக்கள்
பொடிந்த கண்ணாடிக் கோப்பைகள் ஒடிபட்ட மரங்கள்

மூடி திறந்ததும் சுழன்று வருகின்றன
ஈற்றைக் குத்த நாவைச் சுழற்றும்
பற்குத்துக் குச்சிகள்
கனவுலக பீரங்கிகள் போல் இடுக்குகளில்
நுழைந்து நுழைந்து வெடிக்கின்றன குத்திச் சேகரிக்கின்றன
எதிரில் தட்டில் துடைத்தெறிந்து மூடிய தாளுக்கடியில்
இரண்டு கடின ரொட்டிகளுக்கிடையில் நறுக்கிய தக்காளிகளுக்கிடையில்
கடிபட்ட நகரத்தின் மிச்சங்கள்

தட்டில் கொஞ்சம் குடலுள் மீதி
பல்லில் கொஞ்சம், தாளை அடைத்து வெளியேற்றிய
ஏப்பத்திலென்று நகரமொன்றைக்
கேட்டதும் கிடைத்ததும்
தின்றதும் சரியே
குடலுக்குள்ளிருக்கும் நகரம் அழைக்கிறது
அதனுடன் பேசுகிறோம்
தான் குறுக்கப்பட்டதாய் உணர்கிறேன் என்கிறது
தன் மனத்தாங்கலை உரக்கச் சொல்கிறது
அதைச் சமாதானப்படுத்துகிறோம்
அதை ருசிக்கவேண்டியதன் நிர்ப்பந்தத்தை விளக்குகிறோம்
அதன் விடுதலைகுறித்த சாத்தியப்பாடுகளை அலசுகிறோம்
புரிந்ததோ இல்லையோ யாவரும்போல்
கழிப்பறைநோக்கிக் காத்திருக்கிறது
நகரம்.

4 Responses to “ஒரு நகரத்தைக் கடித்தபோது”

  1. இது Says:

    புரிந்ததோ இல்லையோ யாவரும்போல்
    கழிப்பறைநோக்கிக் காத்திருக்கிறது
    நரகம்.
    ;-)

  2. கில்லி - Gilli » A poem - Sannasi Says:

    […] முழுக்கவிதையும் இங்கே… […]

  3. கில்லி - Gilli » A poem - Sannasi Says:

    […] முழுக்கவிதையும் இங்கே… […]

Leave a Reply

Powered by WordPress