March 17, 2006
குழந்தை தவறாய்ச் செய்த முதல் விஷயம்
குழந்தை தவறாய்ச் செய்த முதல் விஷயம்
-டானல்ட் பார்த்தெல்மே
குழந்தை தவறாய்ச் செய்த முதல் விஷயம், தனது புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்தது. எனவே, புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்துக்கும், பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னாக நான்குமணிநேரம் தனது அறையில் தனியாய் அடைந்திருக்கவேண்டுமென்ற விதி ஒன்றை உருவாக்கினோம். தொடக்கத்தில் தினம் ஒரு பக்கத்தைக் கிழித்துக்கொண்டிருந்தாள், பூட்டிய அறைக்குப்பின்னிருந்து வரும் அழுகுரலும் ஓலமும் தொந்தரவுபடுத்துவதாய் இருப்பினும், இந்த விதிமுறை நன்றாகவே வேலைசெய்தது. அதற்குக் கொடுக்கவேண்டிய விலை அதுதான், அல்லது கொடுக்கவேண்டிய விலையில் ஒரு பகுதிதான் என்று காரணம் கூறிக்கொண்டோம். ஆனால், அவள் பிடி வலிமையடையத்தொடங்கியதும், ஒரேநேரத்தில் இரண்டு பக்கங்களைக் கிழிக்கமுடியுமளவு முன்னேறினாள் - பூட்டிய கதவுகளுக்குப்பின் எட்டு மணி நேரமென்பது அனைவரின் அசௌகரியத்தையும் இரட்டிப்பாக்கியது. நாட்கள் செல்லச் செல்ல, மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கிழித்து, உணவு உண்ணமுடியாதபடியும் என் மனைவிக்குக் கவலை ஏற்படும்படியும் தனது அறையில் பதினாறு மணிநேரம் அடைக்கப்பட்டிருந்தாள். ஆனால், ஒரு விதிமுறை உருவாக்கினால் அதைப் பின்பற்றவேண்டுமென்றும், நிலையாக இருக்கவேண்டுமென்றும், இல்லையென்றால் அவர்கள் அதை மேற்போக்காக எடுத்துக்கொள்வார்களென்று நினைத்தேன். இது நிகழ்ந்தபோது அவள் வயது பதினாலோ பதினைந்தோ மாதங்கள். ஒரு மணி நேரமோ ஏதோ கத்தித் தீர்த்தபின்ன்னர் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவாள் - அது ஒரு பெரும் ஆசுவாசம். அவளது அறை வெகு நேர்த்தியானது, ஆடும் மரக்குதிரை ஒன்றுடன், நூற்றுக்கணக்கான பொம்மைகளுடன், பொதிக்கப்பட்ட மிருகங்களுடன். நேரத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் அந்த அறையில் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன - புதிர்கள் இன்னபிற. சிலசமயம் அவளது அறைக் கதவைத் திறக்கையில், துரதிர்ஷ்டவசமாக மேலும் சில பக்கங்களைக் கிழித்திருப்பதைக் கண்டுபிடிப்போம், அந்தப் பக்கங்களுக்கானவற்றையும் நேர்மையாகக் கணக்கில் ஏற்றிவிடுவோம்.
குழந்தையின் பெயர் Born Dancin’. எங்களது சிவப்பு, வெள்ளை, நீல ஒயின்களைக் கொடுத்து குழந்தையிடம் தீவிரமாகப் பேசினோம். உபயோகமில்லை.
அவள் மிகவும் புத்திசாலியாகினாளென்றுதான் கூறவேண்டும். தனது அறையில் அடைக்கப்படாமல் அவள் வெளியிலிருந்து தரையில் விளையாடிக்கொண்டிருக்கும் அபூர்வமான தருணங்களிலொன்றில், அவளருகில் திறந்த புத்தகம் ஒன்று இருக்கும், அதை ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும். பின்பு நீங்கள் கூர்ந்து பார்க்கையில் ஒரு பக்கத்தின் சின்ன மூலையொன்று கிழிபட்டிருக்கும், ஒரு சாதாரணத் தேய்மானம் போல இது இருப்பினும், தான் என்ன செய்தோமென்பதை உணர்ந்துவிட்டிருந்தபடியால், கிழித்த அந்தச் சின்ன மூலையை விழுங்கிவிட்டிருப்பாள். எனவே அதுவும் கணக்கில் ஏற்றப்படவேண்டும், ஏற்றப்பட்டது. உங்களை நொறுக்குவதற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஒருவேளை நாங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறோமோ என்று சந்தேகித்த மனைவி, குழந்தையின் எடை குறைந்துகொண்டு வருகிறது என்றாள். குழந்தைக்கு நீண்ட வாழ்வு காத்திருக்கிறது, பல்வேறு விதிமுறைகளுள்ள உலகத்தில் வாழ்ந்தாகவேண்டும், விதிமுறைகளின்படி வாழக் கற்றுக்கொள்ளாவிட்டால் அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு சாரமில்லாமல் தனிமையாக்கப்படுவதே நிகழுமென்று சுட்டிக்காட்டினேன். நீண்டகாலம் அவள் அடைக்கப்பட்டிருந்ததெனில் எண்பத்தெட்டு மணி நேரங்கள்; கடப்பாறை ஒன்றைக்கொண்டு என் மனைவி கதவை உடைத்துப் பிளந்தபோது இன்னும் பன்னிரண்டு மணி நேரங்கள் மிச்சமிருந்தன - இருபத்தைந்து பக்கங்களைக் கிழித்துத் தீர்த்திருந்தாள். கதவைத் திரும்பப் பொருத்தி, காந்த அட்டையால் மட்டுமே திறக்கமுடியும் பெரிய பூட்டு ஒன்றையும் இட்டேன், அட்டையை என்னுடன் வைத்துக்கொண்டேன்.
ஆனால் விஷயங்களில் மாற்றமில்லை. நரகத்திலிருந்து வெளிவரும் வௌவால் போல அறையிலிருந்து வெளிவரும் குழந்தை, தனக்கு வெகு அருகிலிருக்கும் குட்நைட் நிலவே போன்ற ஏதோவொரு புத்தகத்தின் மேலும் பாய்ந்து பக்கங்களைக் கிழிக்கத்தொடங்கும். அதாவது, குட்நைட் நிலவே புத்தகத்தில் முப்பத்திநான்கு பக்கங்களும் பத்து நொடிகளில் தரையிலிருக்கும் என்கிறேன். அட்டையுடன் சேர்த்து. எனக்குச் சிறிதாகக் கவலை எழுந்தது. அவளது கடனைக் கூட்டிக் கணக்கெடுத்தால், 1992 வரை அந்த அறையிலிருந்து அவள் வெளிவரமுடியாதென்று தெரிந்தது. மேலும், அவள் மிக சோகையாயிருந்தாள். பல வாரங்களாக அவள் பூங்காவுக்குச் செல்லவில்லை. ஒருவிதமான அறவியல் சிக்கல் எங்கள் கைகளில்.
புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிப்பது சரி என்றும், மேலும், முன்பு புத்தகங்களைக் கிழித்திருப்பது பெரிய விஷயமொன்றுமில்லை என்று அறிவித்து பிரச்னையைத் தீர்த்தேன். பெற்றோராயிருப்பதில் அது ஒரு திருப்திகரமான விஷயம் - பலவிதமான நிலைப்பாடுகளை எடுத்தாகவேண்டும், ஒவ்வொன்றும் தன்னளவில் முக்கியமானது. குழந்தையும் நானும் அருகருகாகத் தரையில் அமர்ந்துகொண்டு புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்துக்கொண்டிருக்கிறோம், சிலசமயங்களில் தெருவில் போய் கார்க் கண்ணாடிகளை வேடிக்கைக்காகச் சேர்ந்தே நொறுக்குகிறோம்.
அசல் ஆங்கில வடிவம் இங்கே
தமிழில்: சன்னாசி
5 Responses to “குழந்தை தவறாய்ச் செய்த முதல் விஷயம்”
Leave a Reply
March 17th, 2006 at 11:20 am
Donald Barthelmeஇன் படத்தை ஏன் இப்படி எலாஸ்டிசைஸ் செய்திருக்கிறீர்கள்
அதிலும் இந்தப் பத்தியின் ஜீவநாடியை பிரதிபலிக்கிறதோ!? (img src=”http://i2.tinypic.com/rkvg1w.jpg” border=”0″ hspace=”5″ align=left width=200 height=1350)
March 17th, 2006 at 11:52 am
சன்னாசி - மொழிபெயர்ப்பு நன்றாக வந்திக்ருக்கிறது.
March 17th, 2006 at 11:56 am
இகலப்பையைப் பயன்படுத்தினால் உங்கள் கருத்துப் பெட்டி பிரச்சனை செய்கிறது.
முதல்வரியில் செய்திருப்பதைப் போல “குழந்தை செய்த முதல் தவறு” என்பதையே தலைப்பிலும் செய்திருக்கலாமோ?
March 17th, 2006 at 12:47 pm
வெங்கட்: நன்றி. அசலில் பார்த்தால், தலைப்பு சரி, முதல் வாக்கியம் தவறு எனப் படுகிறது - அதற்கேற்றவாறு இப்போது மாற்றிவிட்டேன் - The first thing the baby did wrong… என்பது தலைப்பாயும், கதைக்குள்ளும் இருப்பதால். The baby’s first mistake என்றிருந்தால் ஒருவேளை அப்படி வருமோ என்னவோ?
பின்னூட்டம் குறித்து: உங்களின் உலாவி ஃபயர்ஃபாக்ஸா? அப்படியெனில், எனக்கும் அதே பிரச்னை இருக்கிறது. இ-கலப்பை மூலம் நேரடியாகப் பெட்டியில் அடித்தால் ஒன்றையொன்று விழுங்கிவிடுகிறது - IEயில் நேரடியாக அடிக்கமுடிகிறது. ஃபயர்ஃபாக்ஸின் அனைத்துப் பெட்டிகளிலும் இதே பிரச்னை இருக்கிறது - முன்பு இங்கே படித்ததும் இதே மாதிரிப் பிரச்னையா தெரியவில்லை.
பால சுப்ரா: ஏதோ நம்மால் முடிந்தது
. பார்த்தெல்மேயின் Flight of pigeons from the palace என்ற கொலாஜ் கதையை எப்படி அச்சிலுள்ளது போலவே வடிவமைப்புடன் வலைப்பதிவுக்குள் பொருத்துவதென்று முயற்சித்துப் பார்த்தேன் - சிக்கலாயிருந்ததால் விட்டாயிற்று. வாய்ப்பிருப்பின் அக்கதையையும் படித்துப் பார்க்க முயலவும்.
March 17th, 2006 at 1:56 pm
கில்லியில் இப்பதிவை மேற்கோள் காட்டி, பாலா இவ்வாறு எழுதியிருந்தார்:
“அனுபவத்திற்கேற்ற தாக்கங்களையும் சிந்தையையும் ஏற்படுத்துகிறது.”
உண்மைதான். இதைப் படித்ததும், வீட்டில் எங்கள் மதியிறுக்கக் குழந்தைக்கு பாடம் சொல்லித்தரும் முறையான ABA முறையும், அதன் கடுமையான விதிகளும் நினைவுக்கு வந்தன. உடல் நலமுள்ள குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களைக் கண்டால் வரும் எரிச்சலும் நினைவுக்கு வந்தது. hmmm….