December 24, 2011
லீப் வருடம்
February 6, 2011
The Burning Plain
February 2, 2011
துறைமுகம்
துறைமுகம்
-சன்னாசி
துறைமுகத்தைக்
கடலுள் இழுத்துப்போயின படகுகள்
கிழிந்த ஒரு பக்க நுனி நொய்ந்து
எப்படியோ நீரில் மூழ்காமல்
மிதந்து வந்து சேர்ந்தது
எப்படியோ சுவரில் குத்தித்
தன் வாலை அசைத்தது
அறுபட்ட துறைமுகம்
உருவாகிய துறைமுகம்
நீர் விலகி என்றார்கள்
நீர் நுழைந்து என்றார்கள்
நுனி வந்து சேர்ந்தது
எந்தத் துறைமுகத்தில் என்று கேட்டார்கள்
பின்
உருவான கதைகள்
நுனி விலகி என்றார்கள்
நுனி நுழைந்து என்றார்கள்
அசாத்தியப் பனிப்பொழிவு வழி
ஒரு சிவப்பு நிறக் கார்
தள்ளாடி முன்னகர்கிறது
கதைகளின் கனம்
காருக்குள்
January 29, 2011
Dogtooth
தந்தை, தாய், இரண்டு மகள்கள், ஒரு மகன். தந்தை தினசரி வேலைக்குப் போய் மாலையில் திரும்ப வருகிறார். தாய் மகனையும் மகள்களையும் வீட்டில் கவனித்துக்கொள்கிறார். மகனுக்கும் மகள்களுக்கும் பின் பதின்ம – தொடக்க இருபதுகளில் வயது இருக்கலாம். உயர்ந்த வேலியிடப்பட்ட, நீச்சல்குளம் உள்ள, ஒதுக்குப்புறமான ஒரு மலையடிவாரத்தில் வாழ்கிறது இக் குடும்பம். வானத்தில் விமானங்கள் பறந்து போவதை குழந்தைகள் பார்க்கின்றன. அவ்வப்போது விமானங்கள் தோட்டத்தில் விழுகின்றன – யார் ஓடிப்போய் விமானத்தை முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் வைத்துக்கொள்ளலாம். ஒருதடவை மகள் ஒருத்தி, மகனின் விமானத்தை நுழைவாயிற் கதவுக்கு வெளியே வீசிவிடுகிறாள். மகன் தந்தையிடம் புகார் செய்கிறான். தந்தை காரை எடுத்து, நுழைவாயிற் கதவுக்கு வெளியே போய், காரைவிட்டுக் கீழே இறங்காமலே விமானத்தை எடுத்து மகனிடம் திரும்பக் கொடுக்கிறார். வெளியுலக நிழல் படாமல், இப்படியாக குழந்தைகளை வளர்க்கின்றனர். குழந்தைகளது கோரைப்பல் விழுந்து பின் முளைத்ததும் அவர்கள் காரில் பத்திரமாக வெளியுலகுக்குச் செல்லலாம் என்று கூறப்படுகிறது. மகனின் பருவ உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, தான் பணிபுரியும் தொழிற்சாலையின் காவலாளிப் பெண்ணை கண்ணைக் கட்டித் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மகனுடன் உறவுகொள்ளவைக்கிறார் தந்தை. வெளியுலகுக்கு இவர்கள் சென்றுவிடாமலிருக்க, ‘வெளியுலகுக்குத் தப்பிச்சென்ற அவர்களது சகோதரனின்’ சிக்கல்மிகுந்த வாழ்வு கூறிக்காட்டப்படுகிறது. ‘தூய்மையான பிரதேசங்களுக்குள்’ வெளிமையின் வரவு என்பது திரைப்படங்களில் ஒரு பொதுவான முடிச்சு. இந்த ‘வரவு’ மனிதர்களாக இருக்கலாம், வேற்றுக்கிரக மிருகங்களாக இருக்கலாம், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப் படத்தில் இந்த ‘வரவு’ க்றிஸ்டினா என்ற காவற்பெண்ணின் வரவு. மகனுடன் உறவுகொள்ள வரவழைக்கப்படும் க்றிஸ்டினாவின் குறியை நக்க மகனுக்கு ஒப்பவில்லை – சாதாரணமான நுழைப்பு உடலுறவே விருப்பமுடையதாயிருக்கிறது. க்றிஸ்டினா, மகள்களிடம் செல்கிறாள், அவர்களுக்கு சிறு பரிசுகள் (முடிப்பிணைகள் – headbands) அளித்து அவர்களைக்கொண்டு தன்னை நக்கச்செய்கிறாள். இது மகள்களிடம் ஒரு பண்டமாற்றாக ஊடுருவுகிறது. பெற்றோர் குழந்தைகளைப் பொத்தி வளர்த்தாலும், தாங்கள் உடலுறவு கொள்கையில் இசை கேட்க வாக்மேனில் ஹெட்ஃபோன்களை மாட்டி இசை கேட்டவாறு உடலுறவு கொள்கின்றனர், நீலப்படம் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கக் கொண்டு வரப்படும் படங்கள் (ராக்கி, ஜாஸ்) மூத்த மகளால் பெறப்பட்டு அவளாலும் பார்க்கப்படுகிறது. ராக்கி சில்வெஸ்டர் ஸ்டாலோனின் வாய் கோணித்த பக்கவாத முகம் ரத்தம் தெறிபட குத்துப்பட்டுத் திரும்புவது போல மூத்த மகள் தானே நடித்துப் பார்த்துக்கொள்கிறாள். நீச்சல்குளத்தில் நீந்தும்போது தனது சகோதரனின் காலை ஜாஸின் சுறா போலக் கடிக்க முயல்கிறாள்.
நான் பார்த்தவரையிலான சமீபத்திய சில வருடங்களின் திரைப்படங்களில் கதையோட்டம், பாத்திரங்கள் என்றளவில் இதற்குச் சற்று நெருக்கமாக வருவது The Ballad of Jack and Rose; மேலும் முடிச்சளவில் கிட்டத்தட்ட இதேபோன்ற மனோஜ் ஷ்யாமளனின் The Village – ஒரேயொரு முடிச்சவிழ்ப்பைமட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பாவனைக்குப்பை. இது ஒரு கிரேக்கப் படம் எனினும் – அச்சு அசலாக இது ஒரு ஜப்பானியப் படமாக இருந்திருக்கக் கூடும் – சிறிது காலம் முன்பு பார்த்த Strange Circus போல. க்றிஸ்டினா தவிர இப் படத்தில் பிற பாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லை, பெரும்பாலான காட்சிகளில் பாத்திரங்களின் தலை காட்டப்படுவதில்லை அல்லது தலைக்கோ முகத்துக்கோ முக்கியம் தரப்படுவதில்லை, வெறும் சம்பவங்கள் மட்டும் அடுக்கிக் காட்டப்படுகின்றனவே தவிர அவற்றுக்கான நிரூபணங்களோ அதற்கான பிரயத்தனங்களோ கோடிட்டுக்காட்டல்களோ ஏதும் இல்லை. பெர்க்மனின் ஃபானி & அலெக்ஸாந்தர் திரைப்படத்தில் அலெக்ஸாந்தர் தனது வளர்ப்புத்தந்தையின் மத-அற-அகங்கார எடையின்கீழ் நசுங்கும் காட்சிகளின் நிறங்களனைத்தும் வெளிறவைக்கப்பட்டிருக்கும் (pastel) – இப் படம் மொத்ததிலுமே நிறங்கள் வெளிறவைக்கப்பட்டிருக்கின்றன – வீட்டின், சுற்றுப்புறங்களின் நிறங்கள் தவிர, வெளியுலகத்தைப் பார்க்கும் ஒரே நபரான தந்தை தவிர பிற அனைவரும் அசாதாரணமாக வெளிறியிருக்கிறார்கள். ஆந்தலூசிய நாய் திரைப்படத்தை முன்பு பார்த்தபோது அதில் லூயி புனுவலின் மகன், அத் திரைப்படத்தின் அந்தக் கால ‘அதிர்ச்சியடையவைக்கும் காட்சி’ குறித்துச் சொல்லியிருப்பார் – கண்ணைத் திறந்து சவரக்கத்தியால் குறுக்காகக் கண்ணை அறுத்துக் கண் பிதுங்கி வழிவது தற்காலத்திய மேற்கத்திய மனத்துக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றாக இல்லாமற் போகலாம், ஆனால் ஒரு தங்கநிற லாப்ரடார் நாயின் தலையைக் கல்லால் அடித்து நசுக்குவதை அதே கோணத்தில் படமாக்கியிருந்தால் அது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என. ‘வெளியுலகத்தில் மனிதர்களை, குழந்தைகளை அவர்களது முகம் உட்பட அனைத்தையும் தின்னக்கூடியதாக’ பெற்றோரால் குறிப்பிடப்படும் பூனையொன்றை முதன்முதலாகத் தங்கள் தோட்டத்தில் பார்க்கும் மகன் பீதியடைந்து, செடி வெட்டும் பெரிய கத்திரிக்கோலால் அதன் வயிற்றில் குத்திக் கொலை செய்கிறான். நாக்கு தள்ளி இறந்த பூனையும் அதன் வயிற்றில் செருகப்பட்ட கத்திரியைப் பார்க்கும் சில மனங்கள் அதிர்ச்சியடையக் கூடும். வேப்பமரத்தடித் திண்டு ஒன்றில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்பு அமர்ந்திருந்தபோது மார்கழி காலைக் குளிரில் இரண்டு நாய்கள் – ஆண் ஒன்று பெண் ஒன்று – குறிகள் இணைக்கப்பட்டு தத்தித் தத்தி நடந்து போயின. அருகில் அமர்ந்திருந்த இரண்டு கைகளில் ஒரு கை, குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்களில் ஒரு குவியல் எடுத்து அவற்றைக் குறிபார்த்துக் குறிபார்த்து அடித்தது. சூடான தேனீர் வந்தது, தம்ளர் அடுக்கு உருவப்பட்டு உருவப்பட்டுக் கலைந்தது, நாய்கள் வீறிட்டு ஓடின, ஒரே திசையிலோ வெவ்வேறு திசைகளிலோ ஓடமுயன்றன.
ஆக, கோரைப்பல் மகள்களுக்கு விழுவதில்லை, விழுந்து முளைப்பதில்லை – விழுந்து முளைத்த கோரைப்பல் மறுபடி எப்படி விழுந்து முளைக்க! குகையிலிருந்து வெளிவந்தபின் எப்படி மறுபடிக் கிடைக்கும் குகை!
Powered by WordPress



